தொழில் அதிபர் வீட்டில் ரூ.2½ கோடி தங்கநகைகள், பணம் கொள்ளை

ஹாசனில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.2½ கோடி தங்கநகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2021-09-08 21:29 GMT
ஹாசன்:ஹாசனில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.2½ கோடி தங்கநகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 

தொழில் அதிபர் 

ஹாசன் டவுன் பென்சன்மொகல்லா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ரகு. இவர் தொழில் அதிபர் ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரகு தனது குடும்பத்தினருடன் துணி எடுத்து வர துணிக்கடைக்கு சென்று இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள் ரகுவின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த தங்கநகைகள், பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்று விட்டனர். 

ரூ.2½ கோடி மதிப்பு 

துணிக்கடைக்கு சென்று விட்டு ரகு தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் நாலாபுறமும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த தங்கநகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரகு, உடனடியாக பென்சன்மொகல்லா போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

 அதன்பேரில் அங்கு சென்ற பென்சன்மொகல்லா போலீசார் ரகுவிடம் விசாரணை நடத்தினர். அப்போது 2 கிலோ 25 கிராம் தங்கநகைகள், ரூ.24 லட்சம் ரொக்கம் மற்றும் சில பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.2½ கோடி என்று கூறப்படுகிறது. 

ஐ.ஜி.ஆய்வு

இந்த கொள்ளை சம்பவம் குறித்து அறிந்ததும் தெற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரவீன் பவார், ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச கவுடா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து பார்வையிட்டனர்.

மேலும் அங்கு வந்த மோப்ப நாய் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. பின்னர் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேககைளை, கைரேகை நிபுணர்கள் உதவியுடன் பதிவு செய்து கொண்ட போலீசார் அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரகு அளித்த புகாரின்பேரில் பென்சன்மொகல்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள். 

மேலும் செய்திகள்