சேலத்தில் வாலிபர் கொலையில் மேலும் 3 பேர் கைது பரபரப்பு தகவல்கள்

சேலத்தில் வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2021-09-08 21:24 GMT
சேலம்,
வாலிபர் கொலை
சேலம் கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 26). அதே பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன், பிரதாப், உதயகுமார். இவர்கள் 4 பேரும் கடந்த 7-ந் தேதி இரவு காளிக்கவுண்டர் காடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே நின்று பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 15-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தது. பின்னர் அந்த கும்பல் வினோத்குமார் உள்பட 4 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதையடுத்து படுகாயம் அடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் வினோத்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 3 பேர் கைது
இந்த கொலை குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வினோத்குமார் கொலை தொடர்பாக கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி பழனிசாமி, சதாம் உசேன், மாதவன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்த முரளி (27), கலீல் (22), லாலா கிருஷ்ணமூர்த்தி (26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில் இந்த கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
பழிக்கு பழி
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, கடந்த ஆண்டு கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த ரவுடி செல்லதுரையை கொலை செய்தது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகி பழனிசாமி, ஜான், வசூர் ராஜா உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஜான் ஆதரவாளர்களுக்கும், செல்லதுரை ஆதரவாளர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் அதிகரிக்க தொடங்கியது.
இதற்கிடையில் செல்லதுரை கொலை வழக்கில் கைதான அ.தி.மு.க. நிர்வாகி பழனிசாமி ஜாமீனில் வெளியே வந்தார். இதனால் செல்லதுரை கொலைக்கு பழிக்கு பழியாக பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இதையறிந்த பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் முந்திகொண்டு செல்லதுரை ஆதரவாளரான வினோத்குமாரை கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா? என தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்