ஓமலூர் அருகே ஏரியில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பலி அண்ணன் கண் எதிரே இறந்த பரிதாபம்
ஓமலூர் அருகே ஏரியில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பலியானான். அண்ணன் கண் எதிரே இந்த சோக சம்பவம் நடந்தது.
ஓமலூர்
3-ம் வகுப்பு மாணவன்
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த ஆர்.சி. செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய தாயார் வள்ளி. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தருண் (வயது 12), கார்த்திக் (10), சித்தார்த் (8) ஆகிய 3 மகன்கள் இருந்தனர். இவர்களில் சித்தார்த் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்தநிலையில் நேற்று மாலை சித்தார்த்தும், அவருடைய தம்பி கார்த்திக்கும் இயற்கை உபாதையை கழிக்க ஆர்.சி.செட்டிப்பட்டி ஏரிக்கு சென்றனர். அங்கு சித்தார்த் ஏரி தண்ணீரில் இறங்கி உள்ளான். கார்த்திக் கரையிலேயே இருந்தான். இதில் ஏரியில் இறங்கிய சித்தார்த் அங்குள்ள சகதிக்குள் சிக்கி தண்ணீரில் மூழ்கினான்.
இதைப் பார்த்த கார்த்திக் உடனே வீட்டுக்கு ஓடி வந்து அவனது பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்களிடம் நடந்த விவரங்களை கூறினான். அதே நேரத்தில் ஏரியில் மூழ்கிய சிறுவன் சித்தார்த் இறந்து விட்டான்.
உடல் மீட்பு
இதனிடையே அங்கு விரைந்து வந்த பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏரியில் மூழ்கிய சித்தார்த்தின் உடலை மீட்டனர். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அண்ணன் கண் முன்னே தம்பி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.