விநாயகர் சிலைகளை உடைத்த 3 பேர் கைது
நாகர்கோவிலில் மதுபோதையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மதுபோதையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுபோதையில்...
விநாயகர் சதுர்த்தியையொட்டி நாகர்கோவில் வடசேரி சந்திப்பு பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.
300-க்கும் மேற்பட்ட 1 அடி முதல் 3 அடி வரையிலான விதவிதமான விநாயகர் சிலைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் இரவு 3 பேர் கொண்ட கும்பல் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்தனர்.
விநாயகர் சிலைகள் உடைப்பு
இங்கு விற்பனை செய்ய வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என விநாயகர் சிைலயை விற்றவர்களிடம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் திடீரென இரும்பு கம்பியால் அவர்களை தாக்கியதோடு, 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளையும் உடைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
விநாயகர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. உடனே இந்து அமைப்புகள், பா.ஜனதாவினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சு வார்த்தை
இதை தொடர்ந்து நாகர்கோவில் துணை சூப்பிரண்டு நவீன்குமார், வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, விநாயகர் சிலையை உடைத்தவர்களை விரைவில் கைது செய்து விடுவோம் என கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் இதுதொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த ராமலால் (வயது 40) புகார் அளித்தார்.
3 பேர் கைது
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், தனிப்படை போலீசார் நேற்று காலை ஒழுகினசேரி பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கோட்டார் பெரியவிளையை சேர்ந்த ராஜா என்ற வடிவேல் (47), இறச்சகுளம் பேச்சான்குளத்தை சேர்ந்த அஜித் (28) மற்றும் முளகுமூடு பறைக்கோட்டை சேர்ந்த ஜோஸ் (43) என்பதும், மதுபோதையில் விநாயகர் சிலைகளை உடைத்து விட்டு தப்பி சென்றவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.