தஞ்சையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
மருத்துவ செலவுகளை காப்பீட்டு நிறுவனங்கள் முழுமையாக வழங்க கோரி தஞ்சையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்:
மருத்துவ செலவுகளை காப்பீட்டு நிறுவனங்கள் முழுமையாக வழங்க கோரி தஞ்சையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஓய்வூதியர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோதண்டபாணி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட செயலாளர் ராஜகோபால், மத்திய, மாநில அரசு ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி குருசாமி, மின்வாரிய ஓய்வூதியர் நலச் சங்க மாவட்ட தலைவர் முனியாண்டி, மாவட்ட பொருளாளர் உத்திராஜ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் நலச்சங்கம் மாநில செயலாளர் ஞானசேகரன், தஞ்சை கிளை செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில், கொரோனா பாதிப்பை காரணம் காட்டி மத்திய பா.ஜ.க. அரசானது, அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் அகவிலைப்படியை கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நிறுத்தி வைத்துள்ளது. இதே நடைமுறையை பின்பற்றி தமிழகத்தை ஆட்சி செய்த முந்தைய அ.தி.மு.க. அரசும், அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டிய அகவிலைப்படியை நிறுத்தி வைத்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஆட்சி அமைத்துள்ள தி.மு.க. அரசும் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்துள்ளது. வயதான ஓய்வூதியர்களின் மருத்துவ செலவை, குறிப்பாக பாதிப்பு மருத்துவ செலவுகளை முழுமையாக வழங்குவதிலும் காப்பீட்டு நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றது. எனவே, அகவிலைப்படி மற்றும் மருத்துவ செலவு காப்பீட்டு திட்டங்கள் மூலம் முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ஜெயபால் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். இதில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சுத்தானந்தன் நன்றி கூறினார்.