கொல்லிமலையில் போலீஸ்காரர் மர்மசாவு: சத்துணவு அமைப்பாளர் உள்பட 3 நண்பர்களிடம் விசாரணை

கொல்லிமலையில் போலீஸ்காரர் மர்மமாக இறந்து கிடந்தது தொடர்பாக சத்துணவு அமைப்பாளர் உள்பட 3 நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2021-09-08 18:33 GMT
சேந்தமங்கலம்:
போலீஸ்காரர் மர்மசாவு
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 23). இவர் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கொல்லிமலை சோளக்கண்ணிபட்டியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் ஆனந்தன் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது உடல் அரை நிர்வாண நிலையில் கிடந்தது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வாழவந்திநாடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆனந்தன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
கொலையா?
விசாரணையில், ஆனந்தன் கடந்த 2 மாதங்களாக பணிக்கு வரவில்லை என்பதும், நண்பர்கள் சிலருடன் அடிக்கடி கொல்லிமலைக்கு சென்று வந்ததும் தெரிந்தது. மேலும் அவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 
இதனிடையே போலீஸ்காரர் ஆனந்தனின் நெருங்கிய நண்பர்களான வாசலூர்பட்டியை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் 3 பேருடன் ஆனந்தன் கொல்லிமலை சென்றதாக கூறப்படுகிறது. 
இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் 3 பேரிடமும் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மேலும் பிரேத பரிசோதனை முடிவில் தான் ஆனந்தன் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்