தங்கத்தகடு பொருத்தப்பட்ட கொடிமரத்துக்கு குடமுழுக்கு

வைத்தீஸ்வரன் கோவிலில் தங்கத்தகடு பொருத்தப்பட்ட கொடிமரத்துக்கு குடமுழுக்கு நடந்தது.

Update: 2021-09-08 18:11 GMT
சீர்காழி;
வைத்தீஸ்வரன் கோவிலில் தங்கத்தகடு பொருத்தப்பட்ட கொடிமரத்துக்கு குடமுழுக்கு நடந்தது. 
5 கிலோ தங்கம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் வைத்தியநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில், நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். 
கோவிலில் வைத்தியநாதர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்துக்கு தங்கத்தகடுகள் பதிக்க தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் 5 கிலோ தங்கம் காணிக்கையாக வழங்கப்பட்டது. இந்த தங்ககட்டிகள் தகடுகளாக மாற்றும் வகையிலான பணிகள் தொடங்கி நடந்து வந்த நிலையில் கொடிமரத்துக்கு தங்க ரேக்குகள், அடிப்பகுதி தாமரை வடிவிலான பத்ம பீடம் ஆகியவை தயார் செய்யப்பட்டு அவை கொடிமரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 
குடமுழுக்கு
பின்னர் தங்க தகடுகள் பொருத்தப்பட்ட கொடிமரத்துக்கு நேற்று காலை குடமுழுக்கு நடந்தது. முன்னதாக 2 கால யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கி நடந்தது. தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்களுடன் புறப்பட்டு கோவிலை வலம் வந்து தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் கொடிமரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இந்த விழாவில் வைத்தீஸ்வரன் கோவில் திருநாவுக்கரசு தம்பிரான், சீர்காழி சொக்கலிங்கம் தம்பிரான், சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சேதுராமன், வைத்தியநாதன், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சாமிநாதன், அ.தி.மு.க. பேரூர் கழக செயலாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்