வசூர் ஏரி மதகில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசிவு
வசூர் ஏரி மதகில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசிவு
வாலாஜா
வாலாஜா அருகே உள்ள வசூர் ஏரி மதகில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசிந்தது. இதனை மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கப்பட்டது.
மதகில் விரிசல்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே பனைமரத்து ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் 148.59 எஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரிக்கு பொன்னை ஆற்றிலிருந்து கீரைச்சாத்து பொன்னியம் மண் ஏரி வழியாக நீர் வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக கீரைசாத்து ஏரிக்கு பொன்னையாற்றில் இருந்து நீர்வரத்து வந்த வண்ணம் உள்ளது. வசூர் ஏரிக்கும் தண்ணீர் வருகிறது.
இந்த நிலையில் வசூர் ஏரியின் மதகு பகுதியில் விரிசல் ஏற்பட்டு ஏரிக்கரையில் உறுதி தன்மையும் இழந்து கடந்த சில நாட்களாக ஏரியில் இருந்து நீர் கசிந்த வண்ணம் இருந்தது. தொடர்ந்து நீர் கசிவு அதிகரித்தபடி இருப்பதால் ஏரிக்கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீரமைப்பு
இது குறித்து கிராம மக்கள் வாலாஜா தாசில்தாருக்கு கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல் மூலம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கோடியூர் ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் சுப்பிரமணியம் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ராவிடம் கிராமமக்கல் புகார் மனு அளித்தனர்.
தகவலறிந்ததும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து ஊராட்சி செயலாளர் சோழன், கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மணல் மூட்டைகளை நிரப்பி உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.