வாழைத்தார் விலை அதிகரிப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி வாழைத்தார் விலை அதிகரித்த தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.;

Update: 2021-09-08 17:56 GMT
பொள்ளாச்சி

விநாயகர் சதுர்த்தியையொட்டி வாழைத்தார் விலை அதிகரித்த தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வாழைத்தார் ஏலம்

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரந்தோறும் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி  வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. 

ஏலத்திற்கு பொள்ளாச்சி, ஆனைமலை, சமத்தூர், ஆத்துப்பொள்ளாச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்களை கொண்டு வந்தனர். 

கொரோனா பரவல் உள்ளதால் கூட்டம், கூடுவதை தவிர்க்க வாழைத்தார்கள் ஏலம் எடை அடிப்படையில் நடத்தப்பட்டது. இதில் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 

வரத்து அதிகரிப்பு  

வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப் படுவதால் வாழைத்தார் வரத்து அதிகரித்து இருந்தும், விலை குறையவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

அதிகபட்சமாக ஒரு கிலோ செவ்வாழை ரூ.30 முதல் ரூ.36 வரை ஏலம் போனது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:- 

பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தூத்துக்குடி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து வழக்கமாக வாழைத்தார்கள் கொண்டு வரப்படும். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக விற்பனை குறைவாக இருந்ததால் தற்போது வெளிமாவட்டங் களில் இருந்து வாழைத்தார் கொண்டு வருவதில்லை. 

விலை உயர்வு 

விநாயகர் சதுர்த்தி என்பதால் இந்த வாரம் 1500 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன. வழக்கமாக வரத்து அதிகமாக இருந்தால் விலை குறைந்து காணப்படும். ஆனால் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.5 அதிகமாக இருந்தது. 

ஒரு கிலோ செவ்வாழை ரூ.30 முதல் ரூ.36 வரையும், கற்பூரவள்ளி ரூ.20 முதல் ரூ.25 வரையும், பூவன் ரூ.22 முதல் ரூ.30 வரையும், நேந்திரம் ரூ.20 முதல் ரூ.27 வரையும், ரஸ்தாளி ரூ.25 முதல் ரூ.30 வரையும், மோரீஸ் ரூ.12 முதல் ரூ.17 வரையும், கதளி ரூ.20 முதல் ரூ.32 வரையும் ஏலம் போனது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்