பாலாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள குவாரி அமைக்க வேண்டும்
மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள குவாரி அமைக்க வேண்டும்
குடியாத்தம்
குடியாத்தம் பேரறிஞர் அண்ணா நகரம் மற்றும் ஒன்றிய அளவிலான மாட்டு வண்டி தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஜெகநாதன் தலைமையில் குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜி.சரவணன் பெற்றுக்கொண்டார்.
அந்த மனுவில் குடியாத்தம் நகரம் மற்றும் ஒன்றியத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் உள்ளன. தற்போது மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ள மணல் குவாரிகள் இல்லை. இதனால் இதனை நம்பி உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளும் பசி, பட்டினியுடன் இருக்கிறோம்.
கட்டுமான தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. மாடுகள் பட்டினியால் சாகும் நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தொழிலாளர்களான நாங்களும் சாகும் நிலைக்குத் தள்ளப்படுவோம். எங்கள் குடும்பத்தில் பிள்ளைகள் கல்வி, பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. ஆகையால் எங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு மாட்டு வண்டிகளில் மணல் அள்ள குடியாத்தம் அடுத்த ஒலக்காசி பஞ்சாயத்தில் பாலாற்றில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறி உள்ளனர்.