தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல்
தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல்
பாப்பாரப்பட்டி, செப்.9-
பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 120 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சாலைமறியல்
பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் தவுலத்பாஷா தலைமை தாங்கினார். இதில் முன்னாள் கவுன்சிலர் ஹாஜிராபீ உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
120 பேர் மீது வழக்கு
தகவல் அறிந்து வந்த பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன், தாசில்தார் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே சாலைமறியலில் ஈடுபட்ட முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தவுலத்பாஷா, முன்னாள் கவுன்சிலர் ஹாஜிராபீ உள்ளிட்ட 120 பேர் மீது பாப்பாரப்பட்டி போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.