12-ந் தேதி 973 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி 973 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி 973 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி அறிவுறுத்தி பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக முக கவசத்துடன் வாழ்ந்து வருகிறோம். அதனை தவிர்க்க கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 62 ஆயிரத்து 896 ஆகும். நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 39 ஆயிரத்து 261 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 257 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
கொரோனா தடுப்பூசி முகாம்
வருகிற 12-ந் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அன்று 1 லட்சத்து 24 ஆயிரம் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 82 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடவில்லை.
எனவே 12-ந் தேதியன்று மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சி, 10 பேரூராட்சி, 4 நகராட்சி ஆகியவற்றில் 973 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெறும். 18 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ஒரு முகாமிற்கு 3 நபர்கள் பணியில் இருப்பார்கள்.
மேலும் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், கூட்டுறவுத்துறை அலுவலர்களும் உடன் இருந்து பணியாற்றுவார்கள். இதன் ஒரே நோக்கம் தடுப்பூசி செலுத்தி கொண்டு கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும். மேலும் 12-ந் தேதியன்று டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே விற்பனை நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான பிரதாப், மாவட்ட வன அலுவலர் அருண்லால் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.