தனிநபர்கள் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி- கலெக்டர் பாலசுப்பிரமணியம்

தனிநபர்கள் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-08 16:22 GMT
கடலூர், 

விநாயகர் சதுர்த்தி விழாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் விளம்பர பலகைகளை அகற்றுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

கட்டுப்பாடுகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் வருகிற 15-ந்தேதி வரை கொண்டாடப்பட உள்ள சமய விழாக்களுக்கு சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. மேலும் மத சார்பான ஊர்வலங்கள், திரு விழாக்கள் நடத்த தடை உள்ளது.
பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நீர் நிலைகளில் கரைக்க அனுமதி

விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், இந்த விழாக்களை பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு அறிவறுத்தப்பட்டுள்ளது. இதை காவல்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கண்காணித்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகில் உள்ள நீர் நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது.

அபராதம்

அரசால் தடைசெய்யப்பட்டுள்ள ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை வணிகர்கள் தவிர்க்க வேண்டும். மேலும், அவ்வப்போது கடைகளில் சோதனை மேற்கொள்வது மற்றும் அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசினார்.

மேலும் செய்திகள்