வேப்பூர் அருகே சரக்கு வாகனத்தில் 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்
வேப்பூர் அருகே சரக்கு வாகனத்தில் 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர்,
கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வேப்பூர் அருகே காஞ்சிராங்குளம் பஸ் நிறுத்தம் அருகில் வேப்பூர்-சேலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் வழிமறித்தனர். பின்னர் சரக்கு வாகனத்தில் சோதனை செய்ததில், சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
30 மூட்டை அரிசி
இதையடுத்து சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வேப்பூர் அடுத்த மங்களூரை சேர்ந்த சித்திரவேல் (வயது 59), திட்டக்குடி அடுத்த மேல்ஆதனூரை சேர்ந்த வெங்கடேசன் மகன் விக்னேஷ் (24) என்பதும், அவர்கள் இருவரும் மங்களூர், லட்சுமணபுரம், வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை மூட்டைகளாக கட்டிக்கொண்டு கோழி தீவனத்திற்காக சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதிக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரவேல், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும், தலா 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டை ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.