உளுந்தூர்பேட்டை அருகே செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா
உளுந்தூர்பேட்டை அருகே செல்லியம்மன் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
உளுந்தூர்பேட்டை
தேர் திருவிழா
உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான செல்லியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் செல்லியம்மனுக்கு தேர் திரு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 75 அடி உயரமுள்ள தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தீப்பந்தங்களை கையில் ஏந்தியபடி 15 இளைஞர்கள் முன்னே செல்ல. அவர்களுக்கு பின்னால் பக்தர்கள் தேரை தங்கள் தோளில் வைத்து சுமந்தபடி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது செல்லியம்மா, செல்லியம்மா என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர்.
இருளில் மூழ்கிய கிராமம்
ஊரை காப்பதற்கு அம்மன் தீப்பந்தம் ஏந்தி வருவதாக ஐதீகம். இதனால் தேர் வீதி வலம் வரும்போது அங்கு மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படும். அப்போது அனைத்து பெண்களும் தங்கள் வீடுகளின் முன்பு சூடம் ஏற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தி அம்மனை வழிபட்டனர்.
தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை மீண்டும் வந்தடைந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். அதனால் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.