சாத்தான்குளம் அருகே திருமண விழாவில் அரிவாளுடன் நடனமாடிய வாலிபர் கைது
சாத்தான்குளம் அருகே திருமண விழாவில் அரிவாளுடன் நடனமாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே திருமண விழாவில் அரிவாளுடன் நடனமாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
அரிவாளுடன் நடனம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த ஒருவரின் திருமண விழா கடந்த ஏப்ரல் மாதம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற சிலர், அரிவாளுடன் நடனம் ஆடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ, சாத்தான்குளம் பகுதியில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து பொது இடத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக சாத்தான்குளம் முஸ்லிம் மேல தெருவை சேர்ந்த வேலு மகன் செல்லப்பா, மரிய ஜோசப் மகன் வடை என்ற கிங்ஸ் டன்ஜெயசிங் (20), மற்றும் 3 பேர் உள்ளிட்ட 5 பேர் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
வாலிபர் கைது
இதில் கிங்ஸ்டன் ஜெயசிங், கேரளாவில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் கேரளா சென்று அவரை, நேற்று கைது செய்தனர். அவரிடம் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய செல்லப்பா உள்ளிட்ட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.