ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவோரை கண்காணிக்க போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி வாணியம்பாடியை அடுத்த 102 ரெட்டியூர் பகுதியில் ஆலங்காயம் போலீசார் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்தவழியாக வந்த வேனை நிறுத்த முயன்றபோது வேன் நிறுத்தாமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் வேனை துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
வேனை சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது. விசாரணையில் திருப்பத்தூரில் இருந்து 102 ரெட்டியூர் வழியாக ஆந்திராவுக்கு சுமார் 4 டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது.
போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய ஒசூரை சேர்ந்த வேன் டிரைவர் சிவா என்கிற பெருமாள் (வயது 39), ஆலாங்குப்பம் குறவர் வட்டத்தை சேர்ந்த வேன் உரிமையாளர் சண்முகம் (49) ஆகியோரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.