தூத்துக்குடியில் அனைத்து துறை அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட தலைவர் சாம்பசிவன், மின்சாரவாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட செயலாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆர்ப்பாடடம் குறித்து விளக்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாநில இணை செயலாளர் லீலாவதி கலந்து கொண்டு பேசினார்.
கோரிக்கை
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் பணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்தவும், செலவுத்தொகை முழுவதையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து துறை அரசு ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டமைப்பு மாவட்ட பொருளாளர் முத்தையா நன்றி கூறினார்.