புதுச்சேரி விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல்
புதுச்சேரி விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்வது குறித்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.;
புதுச்சேரி, செப்.8-
புதுச்சேரி விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்வது குறித்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை
புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் விளையும் நெல்லை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து புதுவை அரசு சார்பில் விவசாயிகளிடம் நெல்லை நேரடியாக கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் நேற்று சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் குடிமைப்பொருள் வழங்கல் துறை செயலாளர் மற்றும் இயக்குனர் உதயகமார், வேளாண்துறை செயலாளர் வல்லவன், இயக்குனர் பாலகாந்தி, கூடுதல் இயக்குனர் ஜெய்சங்கர், இந்திய உணவுக்கழக பொது மேலாளர் பி.என்.சிங், தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு மேலாளர் பிஜோய் ஜான் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நேரடி நெல் கொள்முதல்
கூட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்திய உணவு கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் செய்வதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், வரும் சம்பா பருவத்தில் இருந்து புதுவை மாநில விவசாயிகள் பாதிக்காத அளவில் முழு அளவில் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது.