நெல்லை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து: வடமாநில தொழிலாளி பரிதாப சாவு

வடமாநில தொழிலாளி பரிதாப சாவு

Update: 2021-09-07 21:42 GMT
நெல்லை:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் புர்சிங் (வயது 22). இவர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் தங்கியிருந்து வீடுகளில் கிரானைட் கற்கள் பதிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் நேற்று புர்சிங் மற்றும் அவருடன் வேலை பார்த்த ராஜஸ்தானை சேர்ந்த ராஜீ, ராம்சிங், பூவே உள்ளிட்ட 8 பேர் ஒரு லோடு ஆட்டோவில் கிரானைட் கற்களை ஏற்றி கொண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்திற்கு சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை மருதநகரை சேர்ந்த ராஜேஷ் ஓட்டினார். பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி அருகே உள்ள தாமரைசெல்வி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, லோடு ஆட்டோ திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது. இதில் புர்சிங் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ராஜீ, ராம்சிங், பூவே ஆகிய 3 பேர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புர்சிங் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 3 பேரையும் மீட்டு அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்