கேரளா செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்; கர்நாடக அரசு வேண்டுகோள்

கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2021-09-07 21:36 GMT
பெங்களூரு: கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதனால் அங்கிருந்து வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வருகிறார்கள். அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்யும்போது, கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகிறது. இதனால் எல்லை மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

அதனால் கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள், ஆஸ்பத்திரிகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கேரள மாநிலத்தவர்கள், சொந்த ஊருக்கு சென்றிருந்தால், அவர்கள் கர்நாடகத்திற்கு வருவதை அக்டோபர் மாதம் இறுதி வரை ஒத்திவைக்க வேண்டும். மேலும் இங்கு இருப்பவர்கள் கேரளாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தால், அதையும் அக்டோபர் மாதம் இறுதி வரை தள்ளி வைக்க வேண்டும்.

மேலும் பொதுமக்கள் கேரளாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தால், அந்த பயணத்தை அக்டோபர் வரை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத வேலைகள் இருந்தால் உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செல்லலாம்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்