சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் வழங்க ரூ.2 கோடி லஞ்சம்: கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு கெடு

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் சிறைத்துறை அதிகாரிகள் இருவர் மீதும் 4 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு கெடு விதித்துள்ளது.;

Update: 2021-09-07 21:35 GMT
பெங்களூரு: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் சிறைத்துறை அதிகாரிகள் இருவர் மீதும் 4 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு கெடு விதித்துள்ளது. 

சிறை தண்டனை

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கடந்த 2018-ம் ஆண்டு அடைக்கப்பட்டனர். 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைந்ததை அடுத்து சசிகலா, இளவரசி ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையே சசிகலா சிறையில் இருந்தபோது, சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது சசிகலாவுக்கு சட்டத்திற்கு புறம்பாக சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது அவருக்கு தெரியவந்தது. அதாவது சமையல் செய்ய அறை வசதி, கைதிகள் அணியும் உடை அணியாமல் சாதாரண உடை அணிய அனுமதித்தது, மேலும் சசிகலா வெளியே சென்று வரவும் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா அம்பலப்படுத்தினார்.
 
ரூ.2 கோடி லஞ்சம்

இந்த சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து ரூபா, சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், அதற்கு அப்போது சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவுக்கு சசிகலா லஞ்சமாக ரூ.2 கோடி வழங்கியதாகவும் பரபரப்பு புகார் கூறினார். 

இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அறிக்கையை தனது மேல் அதிகாரிக்கு ரூபா அனுப்பினார். அதன் அடிப்படையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் கர்நாடக அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. அதில், சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக ரூபா கூறிய புகார்கள் உண்மையானவை தான் என்று கூறி அந்த குழு அரசுக்கு அறிக்கை வழங்கியது. அந்த அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சி.பி.ஐ. விசாரணை கோரி மனு

அதன் பேரில் கர்நாடக ஊழல் தடுப்பு படையினர், அப்போதைய சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ், சிறைத்துறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்று புகார் எழுந்தது. 

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர், கர்நாடக ஐகோர்ட்டில், ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும், ஊழல் தடுப்பு படையினர் இந்த வழக்கை விரைந்து முடிக்கவில்லை என்றும், எனவே சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரினார். 

2 அதிகாரிகள் மீது நடவடிக்கை

இதுகுறித்த விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான விசாரணை விவரங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை மூடிய கவரில் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஊழல் தடுப்பு படைக்கு உத்தரவிட்டனர்.

 அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஊழல் தடுப்பு படையினர், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை 7-ந் தேதிக்கு (அதாவது நேற்று) ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி கர்நாடக ஐகோர்ட்டில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, வழக்கில் தொடர்புடைய 2 அதிகாரிகள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு ஊழல் தடுப்புபடை சார்பில் ஆஜரான வக்கீல், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சத்தியநாராயணராவ், சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதியை கேட்டுள்ளோம் என்றும், எனவே அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க 60 நாட்கள் கால அவகாசம் வழங்குமாறும் கேட்டார்.

நேரில் ஆஜராக உத்தரவு

அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, "இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. இந்த காலக்கட்டத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீங்கள் அனுமதி பெறாமல் இருந்தது ஏன்?. உங்களுக்கு 4 வாரம் காலஅவகாசம் தருகிறேன். அதற்குள் அந்த 2 அதிகாரிகள் மீதும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஒருவேளை நடவடிக்கை எடுக்காவிட்டால், கர்நாடக அரசின் தலைமை செயலாளர் கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

எழுத்துப்பூர்வமாக தாக்கல்

இதனிடையே இந்த வழக்கில் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டவர்களிடம் இதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்து எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்