தேவூர் சரபங்காநதி தடுப்பணை நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
தேவூர் சரபங்கா நதி தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பணை வழியாக பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவூர்
சரபங்கா நதி அணை
சேலம் மாவட்டம் சேர்வராயன் மலை பகுதியில் உற்பத்தியாகி வரும் சரபங்கா நதி ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, எடப்பாடி வழியாக தேவூர் சரபங்காநதி தடுப்பணை வழியாக அண்ணமார் கோவில் பகுதியில் காவிரி ஆற்றில் கலந்து செல்கிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காடு மலைப்பகுதியில் கனமழை பெய்த போது, சரபங்கா நதி தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடி அண்ணமார் கோவில் பகுதியில் காவிரி ஆற்றில் கடந்து சென்றது. இந்த நிலையில் கடந்த 20 ஆண்டு காலமாக சரபங்கா நதி ஆக்கிரமிப்புகளால் பல்வேறு இடங்களில் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது.
நிரம்பியது
இதனால் தண்ணீர் முழுவதும் தேவூர் சரபங்கா நதி தடுப்பணை வழியாக செல்ல முடியாமல் போனது. இந்த நிலையில் மேட்டூர் கிழக்கு கரை கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கால்வாய் தண்ணீர் ஏரி மற்றும் சரபங்கா நதியில் விடப்பட்டது. இதனால் தற்போது தேவூர் பகுதியில் பெய்து வரும் கன மழையால் தேவூர் சரபங்கா நதி தடுப்பணை வழியாக தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடி செல்கிறது.
இதனால் தடுப்பணை பகுதியில் உள்ள பெரமாச்சிபாளையம், வெள்ளக்கல் தோட்டம், பாங்கிகாடு, சென்றாயனூர், ஒடசக்கரை, பனங்காடு, கோணக்கழுத்தானூர், மயிலம்பட்டி, உள்ளிட்ட பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சரபங்கா நதி தண்ணீரை பயன்படுத்தி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் உள்ளிட்ட பயிர் வகைகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
கோரிக்கை
மேலும் தேவூர் சரபங்காநதி தடுப்பணை வழியாக 6 மாத காலத்திற்கு தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடும் என்பதால் தடுப்பணை வழியாக செல்லும் மயிலம்பட்டி, மேட்டூர், பெரமாச்சிபாளையம், சென்றாயனூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தடுப்பணையில் நிரம்பி செல்லும் தண்ணீர் மீது ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர்.
எனவே இந்த தடுப்பணை வழியாக பாலம் அமைக்க வேண்டும் என தேவூர் சுற்றுவட்டார கிராம மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.