ஓமலூரில் ‘ஷட்டர்’ பூட்டை உடைத்து துணிகரம்: பல்பொருள் அங்காடியில் 800 கிராம் வெள்ளிக்காசுகள்-பணம் திருட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான 3 பேருக்கு வலைவீச்சு
ஓமலூரில் பல்பொருள் அங்காடியின் ஷட்டர் பூட்டை உடைத்து 800 கிராம் வெள்ளிக்காசுகள், ரூ.27 ஆயிரத்தை திருடிச்சென்ற 3 பேரை கண்காணிப்பு கேமரா பதிவின் மூலம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓமலூர்
பல்பொருள் அங்காடி
ஓமலூரை அடுத்த பஞ்சு காளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 35). இவர் ஓமலூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பல்பொருள் அங்காடி (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்) நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் மளிகை பொருட்கள் விற்ற பணம் ரூ.27 ஆயிரம் மற்றும் அதிகளவில் மளிகைப் பொருட்கள் வாங்கிய நுகர்வோருக்கு ஊக்கப்பரிசு வழங்க 2 கிராம் எடையுள்ள 400 வெள்ளி காசுகளை தனது மேசை டிராயரில் வைத்துவிட்டு நேற்று முன்தினம் இரவு பிரபாகரன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று காலை அவர் வழக்கம் போல் கடைக்கு வந்து ஷட்டரை திறக்க முயன்ற போது, அது நெம்பி திறக்கப்பட்டு இருப்பதை பார்த்தார். உடனே அவர் கடைக்குள் சென்று பார்த்த போது, டிராயரில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ.27 ஆயிரம் மற்றும் 800 கிராம் வெள்ளிக்காசுகள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
இதையடுத்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்த போது அதில் 3 பேர் மெயின் ரோட்டில் இருந்து கடைக்கு வருவதும், ஒருவர் யாராவது வருகிறார்களா? என நோட்டமிடுவதும் தெரியவந்தது. பின்னர் ஷட்டரை கம்பி போட்டு தூக்கி ஒருவர் உள்ளே புகுந்து டிராயரில் இருந்த பணம் மற்றும் வெள்ளி காசுகளை எடுப்பதும், வெளியில் 2 பேர் காவலுக்காக நின்று இருக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.
இதையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளுடன் சம்பவம் குறித்து பிரபாகரன் ஓமலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓமலூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியில் நள்ளிரவில் கடையில் மர்ம நபர்கள் 3 பேர் புகுந்து ரொக்கம் மற்றும் வெள்ளி காசுகளை திருடிச்சென்ற துணிகர சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியடைய செய்து உள்ளது.