தொங்கிக்கொண்டிருக்கும் ‘தமிழ் வாழ்க’ பலகை சரி செய்யப்படுமா?
தொங்கிக்கொண்டிருக்கும் ‘தமிழ் வாழ்க’ பலகையை சரி செய்ய வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெரம்பலூர்:
தமிழக அரசு தற்போது தமிழ் மொழி மீது மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. தமிழ் மொழியில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகளும் வழங்கியும், தமிழறிஞர்களை கவுரப்படுத்தியும் வருகிறது.
ஆனால் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ் மொழி சாய்ந்து வருகிறது. அதாவது அந்த அலுவலகத்தின் மேற்கூரையில் வைக்கப்பட்டிருந்த ‘தமிழ் வாழ்க’ என்று எழுதப்பட்ட இரும்பிலான பலகை சாய்ந்து, தற்போது எந்நேரத்திலும் கீழே விழும் அபாய நிலையில் தொங்கிக்கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அதனை கண்டும், காணாததைப்போல் சென்று விடுவதால், அந்த பலகை அந்தரத்தில் பரிதாபமாக தொங்கிக்கொண்டிருக்கிறது. எனவே தமிழ் வாழ்க என்ற எழுத்துக்கள் தாங்கிய பலகை வீழ்வதை தடுக்க, அதனை சரி செய்ய இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.