சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் ஈரோடு சம்பத் நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், கோபி கோட்ட தலைவர் தர்மலிங்கம், செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளா் சென்னியப்பன், மாவட்ட செயலாளர் சி.நல்லசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
12 அம்ச கோரிக்கைகள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களை திறன்மிகு இல்லா ஊழியர்களாக அறிவித்து தர ஊதியம் ரூ.1,900 என மாற்றி அமைத்து புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். சீருடை, சலவை படி, விபத்து படி, சைக்கிள் படி வழங்க வேண்டும். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலை பணியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட மொத்தம் 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் சங்க மாவட்ட பொருளாளர் ரங்கநாதன் உள்பட சாலை பணியாளர்கள் பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சங்கத்தினர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்கள்.