வடமாநில தொழிலாளர்களின் விவரங்களை சரிபார்க்க வேண்டும்

கரூரில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் அறிவுரை கூறினார்.

Update: 2021-09-07 19:35 GMT
கரூர்,
விழிப்புணர்வு கூட்டம்
கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் வடமாநில தொழிலாளர்களின் பின்னணியை அறிந்து கொள்வதற்கான விழிப்புணர்வு கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வடமாநில தொழிலாளர்கள்
பாதுகாப்பு காரணங்களுக்காக கரூரில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் அடிப்படை விவரங்களை சேகரிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட வேறுசில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் மூலமாக அவர்களுடைய முகவரியை தெரிந்து கொள்ள வேண்டும். அது சரியான முகவரி தானா? என்று சோதனை செய்ய வேண்டும். வடமாநில தொழிலாளர்களின் முகவரி, ஆதார் கார்டு அனைத்தையும் இணைத்து போலீசார் மூலமாக சரிபார்த்த பின்னர் அவர்களை பணிக்கு அமர்த்துவது நல்லது. இது மிக அவசியமானது. 
கண்காணிப்பு கேமரா
இதேபோல் குற்றப்பின்னணி உள்ளவர்களை நீங்கள் அடையாளம் காண முடியாது. அதனால்தான் போலீசார் மூலம் சரிபார்க்கும்போது, குற்றப்பின்னணி இருந்தால் அவர்களை அடையாளம் காணமுடியும். அதேபோல் நிறுவனங்களை சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதலாக கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். அனைவரின் பாதுகாப்பிற்கும் கண்காணிப்பு கேமரா அவசியமானது. கரூர் மாநகரத்தை சுற்றியும், உள்இடங்களிலும் விரைவாக கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்பது எங்களுடைய முயற்சி. அதற்காக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்