கோவில் திருவிழா நடத்த தடை: மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி:
மண்பாண்ட தொழிலாளர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலை பிரிவில் துவரடிமனை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மண்பாண்டத்தால் கோவில் திருவிழாவிற்கு தேவையான குதிரைகள் சிலைகள், விநாயகர் சதுர்த்திக்கு தேவையான விநாயகர் சிலைகள் ஆகியவை காலம், காலமாக தயார் செய்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள கோவில்களின் திருவிழாக்களுக்கு இங்கு இருந்துதான் ஆர்டரின் பேரில் குதிரை, சாமி, பொம்மை உள்ளிட்ட சிலைகள் தயாரித்து தொழிலாளர்கள் வழங்கி வருகின்றனர்.
விநாயகர் சிலைகள் தேக்கம்
தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளதால் கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் எந்த வேலையும் இல்லாமல் இருந்து வருகின்றனர். மண்பாண்ட தொழிலாளர்கள் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்திக்கு இந்த பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகளை ஆர்டரின் பெயரில் செய்து கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது அரசு கொரோனா தொற்றால் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபடவும், ஊர்வலத்திற்கும் தடை விதித்துள்ளது.
இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். பக்தர்கள் விநாயகர் சிலைகளை வழிபடுபவதற்கு வாங்குவார்கள் என்று நம்பி விநாயகர் சிலைகள் செய்ய மூலப்பொருள் வாங்கி, பணம் சிலவு செய்து விநாயகர் சிலை செய்து அடிக்கி வைத்துள்ளனர். ஆனால் யாரும் வாங்க வரவில்லை என கூறுகின்றனர். இதனால் அந்த சிலைகளும் விற்காமல் தேங்கி கிடக்கிறது.
3 தலைமுறையாக
இதுகுறித்து துவரடிமனையை சேர்ந்த சங்கர் என்பவர் கூறியதாவது:- நாங்கள் இந்த மண்பாண்ட தொழிலை 3 தலைமுறையாக செய்து வருகிறோம். கடந்த 25 வருடங்களுக்கு முன் மக்கள் அனைவரும் மண்பாண்டத்தில் ஆன பொருட்களையே அதிகம் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். தற்போது பிளாஸ்டிக், எவர்சில்வர், அலுமினியம் என பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கின்றனர்.
இதனால் இந்த தொழில் நலிவடைந்து வருகிறது. அரசு நலிவடைந்து வரும் எங்கள் மண்பாண்ட தொழிலை காக்க வேண்டும். மேலும் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை விற்பனை ஆகும் என நம்பியும், குடும்பம் நடத்த பணம் வேண்டும் என என்னி ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரையிலான விநாயகர் சிலைகளை செய்து கலர் வர்ணம் அடித்து அடிக்கி வைத்துள்ளோம்.
கோரிக்கை
அரசு தடை உத்தரவால் எந்த சிலையும் விற்பனை ஆகவில்லை. இதே நிலைதான் அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களின் நிலையும். இதனால் வாழ்வாதாரம் இழந்து உள்ள அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் நிவாரணம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்யவேண்டும். சிறு, குறு தொழிலை காப்பது போல் எங்களையும் இந்த அரசு காக்க வேண்டும் என்றும், நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.