கொல்லிமலையில் போலீஸ்காரர் மர்மசாவு

கொல்லிமலையில் போலீஸ்காரர் மர்மசாவு

Update: 2021-09-07 18:29 GMT
நாமக்கல், செப்.8-
நாமக்கல்லை சேர்ந்த போலீஸ்காரர் கொல்லிமலையில் காட்டு பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ்காரர்
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ஆனந்தன் (வயது34). நாமக்கல் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் போலீசாக பணியாற்றி வந்தார். திருமணமாகாத அவர், கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி முதல் பணிக்கு வரவில்லை.
அவர் கொல்லிமலைக்கு அடிக்கடி நண்பர்களுடன் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று கொல்லிமலை வாசலூர்பட்டி அருகே சோளங்கன்னி என்ற இடத்தில் காட்டு பகுதியில் செடிகளுக்கு இடையே மர்மமான முறையில் மேல்சட்டை இன்றி இறந்து கிடந்தார்.
இது குறித்து அவ்வழியாக சென்ற மலைவாழ் மக்கள், வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அடித்துக்கொலை?
இறந்து போன போலீஸ்காரர் ஆனந்தன் தலையில் லேசான காயம் உள்ளது. அவர் மேல்சட்டை இன்றி இறந்து கிடந்ததால், அவரது இறப்பு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அவர் சம்பவ இடத்திற்கு செல்ல காரணம் என்ன ? இல்லை எனில் மர்ம நபர்கள் அவரை கொலை செய்து காட்டு பகுதியில் பிணத்தை வீசி சென்றார்களா ? அவ்வாறு கொலை செய்யப்பட்டு இருந்தால் கொலைக்கான காரணம் என்ன? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தகவல் அறிந்ததும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தி வருகிறார். முழுமையான விசாரணைக்கு பிறகே போலீஸ்காரர் ஆனந்தன் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா ? தவறி விழுந்து இறந்தாரா ? இல்லை எனில் வேறு ஏதேனும் காரணம் உண்டா ? என்பது தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரபரப்பு
அவரது பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த வாழவந்திநாடு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல்லை சேர்ந்த போலீஸ்காரர் கொல்லிமலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்