தரங்கம்பாடி சமூக நலத்துறை தனி தாசில்தார் கைது
மாற்றுத்திறனாளி சான்று வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தரங்கம்பாடி சமூக நலத்துறை தனி தாசில்தாரை போலீசார் கைது செய்தனர்.
பொறையாறு:
மாற்றுத்திறனாளி சான்று வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தரங்கம்பாடி சமூக நலத்துறை தனி தாசில்தாரை போலீசார் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளி சான்று
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே காரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 61). இவருடைய மனைவி தையல்நாயகி.
மாற்றுத் திறனாளியான இவர், உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளி சான்று வேண்டி தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் பாலமுருகனிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
ரூ.2 ஆயிரம் லஞ்சம்
மாற்றுத்திறனாளி சான்று வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என சமூக பாதுகாப்பு நலத்துறை தனி தாசில்தார் பாலமுருகன் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமச்சந்திரன் இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ரசாயன பவுடர் தடவிய பணம்
இதை தொடர்ந்து நாகை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சித்திரவேலு தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் குமார், அருள்மொழி மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் மாறு வேடத்தில் நேற்று காலை தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தனர்.
தனி தாசில்தார் பாலமுருகனை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்து ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரம் நோட்டை ராமச்சந்திரனிடம் கொடுத்து அதை தனி தாசில்தார் பாலமுருகனிடம் வழங்குமாறு கூறி அனுப்பி வைத்து விட்டு போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.
தனி தாசில்தார் கைது
இதையடுத்து ராமச்சந்திரன், ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் நோட்டை தனி தாசில்தார் பாலமுருகனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர். மேலும் அங்கு இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இதை தொடர்ந்து போலீசார், தனி தாசில்தார் பாலமுருகனை கைது செய்து அவரை விசாரணைக்காக நாகை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு
மாற்றுத்திறனாளி சான்று வழங்க லஞ்சம் வாங்கிய தனி தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.