நிழற்குடை இல்லாததால் மாணவர்கள் அவதி
வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு நிழற்குடை வசதி இல்லாததால் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
வால்பாறை
வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு நிழற்குடை வசதி இல்லாததால் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
நிழற்குடை
வால்பாறை நகர் பகுதியில் புதிய பஸ்நிலையம், காந்தி சிலை பஸ்நிறுத்தம், பழைய பஸ்நிலையம் ஆகிய பஸ்நிறுத்த பகுதிகள் உள்ளன. இது தவிர வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பு வால் பாறை மெயின் ரோட்டில் நகராட்சி அலுவலகம் முன்பு நிழற்குடை வசதி இருந்தது.
குறிப்பாக நகராட்சி அலுவலகம் முன்பு இருந்த நிழற்குடை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
5 மாதத்துக்கு முன்பு அகற்றம்
வால்பாறையில் இருந்து வாட்டர்பால்ஸ், கவர்க்கல், அய்யர் பாடி, ரொட்டிக்கடை மற்றும் பொள்ளாச்சி பகுதிக்கு செல்லக் கூடியவர்கள் அங்கு பஸ்சுக்காக காத்து நின்று வந்தனர்.
ஆனால் நகராட்சி அலுவலக விரிவாக்க பணி காரணமாக கடந்த 5 மாதத்துக்கு முன்பு நிழற்குடை அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக அதன் அருகிலேயே நிழற்குடை வசதி செய்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாணவர்கள் அவதி
தற்போது பள்ளி, கல்லூரி திறக்கப்பட்டு உள்ளதால், இங்கு ஏரளாமான மாணவ-மாணவிகள் பஸ்சுக்காக காத்து நிற்கிறார்கள். ஆனால் அங்கு நிழற்குடை வசதி இல்லாததால் அவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு நிழற்குடை வசதி இல்லாததால் அங்கு காத்து நிற்கும் மாணவர்கள் மழைக் காலத்தில் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
தற்போது மழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரி முடிந்த பின்னர் மழையில் நனைந்தபடி காத்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இங்கு உடனடியாக நிழற்குடை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.