காரில் இருந்து அரைநிர்வாணமாக பெண் பிணம் வீச்சு

காரில் இருந்து அரைநிர்வாணமாக பெண் பிணம் வீச்சு

Update: 2021-09-07 17:41 GMT
காரில் இருந்து அரைநிர்வாணமாக பெண் பிணம் வீச்சு
கோவை

கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே காலை நேரத்தில் பெண் பிணம் கிடந்தது. இது குறித்த புகாரின் பேரில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு அரை நிர்வாணமாக கிடந்த பெண் ணின் உடலை கைப்பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரோட்டில் பெண் உடல் கிடப்பது தெரியாமல் அடுத்தடுத்து வாக னங்கள் ஏறி சென்றதால் உடல் சிதைந்த நிலையில் இருந்தது. இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் ஆஸ்பத்திரி அருகே சாலையின் இடதுபுறம் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில், ஒரு லாரிக்கு பின்னே வரும் கருப்பு நிற காரின் வலது பக்கத்தில் இருந்து பெண் பிணம் வீசப்படும் காட்சி பதிவாகி இருந்தது. இதனால் அந்த காரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். 


இதற்காக அந்த சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கார் எண் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். அரை நிர்வாண நிலையில் பெண் பிணம் கிடந்ததால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? என்று கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது:-
\
அந்த பெண் பிணம் காருக்குள் இருந்து விழுந்ததா? அல்லது விபத்தில் சிக்கிய பெண் உடல் இழுத்து வரப்பட்டதில் அவருடைய ஆடைகள் கழன்றதா? என்று விசாரித்து வந்தோம். பிணம் கிடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் சேலை மற்றும் ஆடைகள் கிடந்தன. அவை கைப்பற்றப்பட்டு உள்ளது. 
பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இல்லை. 

இறந்த பெண்ணுக்கு 60 வயது வரை இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே காணாமல் போன 60 வயது பெண்களின் புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்து வருகிறோம். மேலும் இந்த வழக்கில் துப்புத்துலக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இறந்த பெண் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்