விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டி.ஜி.பி. போலீஸ் சூப்பிரண்டு ஆஜர்
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தொடர்ந்த பாலியல் வழக்கில் சிறப்பு டி.ஜி.பி., போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆஜராகினர். இவ்வழக்கின் விசாரணை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.;
விழுப்புரம்,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
போலீஸ் அதிகாரிகள் ஆஜர்
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆஜராகினர். அப்போது, இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வராது, எனவே இவ்வழக்கை இங்கு விசாரிக்கக்கூடாது என்று ஏற்கனவே சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடந்தது.
அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வைத்தியநாதன் வாதாடுகையில், இவ்வழக்கை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலேயே விசாரிக்கலாம், அதற்கு முழு அதிகாரமும் உண்டு என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
விசாரணை 14-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
அப்போது, சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் ஆஜராகி, ஐகோர்ட்டு உத்தரவு நகலை சமர்ப்பித்தால்தான் நாங்கள் வாதாட வசதியாக இருக்கும் என்று கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அரசு தரப்பு வக்கீல் வைத்தியநாதன், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின்போது ஐகோர்ட்டு உத்தரவு நகலை சமர்ப்பிப்பதாக கூறினார்.
இதை கேட்டறிந்த நீதிபதி கோபிநாதன், இவ்வழக்கு விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.