விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தைஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்களால் பரபரப்பு
ஆதிதிராவிடர் நலத்துறை கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள தாதம்பாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருக்கு சொந்தமாக 4¾ ஏக்கர் நிலம் அதே கிராமத்தில் உள்ளது. கடந்த 1996-ம் ஆண்டில் ஏழை மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ராமலிங்கத்தின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக அவருக்கு இழப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டது.
இதில் கடந்த 1999-ம் ஆண்டில் ராமலிங்கத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்து 886 வழங்கப்பட்டது. மீதமுள்ள இழப்பீட்டு தொகையான ரூ.1 லட்சத்து 94 ஆயிரத்தை ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கவில்லை. இதையடுத்து இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்கக்கோரி ராமலிங்கம், விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஜப்தி செய்ய வந்தனர்
இவ்வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த வேளையில் ராமலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். அதன் பிறகு அவரது மகன் இளந்திரையன் மனுதாரராக செயல்பட்டார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, ராமலிங்கம் குடும்பத்திற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்றும் இந்த இழப்பீட்டு தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அந்த தொகைக்குரிய அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய நேரிடும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின்னரும் ராமலிங்கம் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கவில்லை. இதையடுத்து நேற்று கோர்ட்டு உத்தரவின்படி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் வந்தனர்.
பேச்சுவார்த்தை
உடனே அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்களிடம் பேசி ஒரு வாரத்திற்குள் இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு ஊழியர்கள், தற்காலிகமாக ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.
ஆதிதிராவிடர் நலத்துறை கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.