இழப்பீடு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
உயர்மின் கோபுர பணியால் பாதிக்கப்பட்டுள்ளதால் உரிய இழப்பீடு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நேற்று காலை விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு குறிப்பிட்ட சிலரை மட்டும் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்குள் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இழப்பீடு வழங்கக்கோரி
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் டி.மோகனிடம் விவசாயிகள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மேல்மலையனூர், செஞ்சி ஆகிய தாலுகாக்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி தொடரமைப்பு கழகம் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் பாக்கம், புதுப்பாளையம், கருவாட்சி, தாங்கல், சத்தியமங்கலம், விநாயகபுரம், ரெட்டிப்பாளையம், ஆற்காம்பூண்டி, தென்பாலை, ராஜாபாளையம், செவலபுரை, தாதங்குப்பம், மன்னூர், பொற்குணம், கலிங்கமலை உள்ளிட்ட பல கிராமங்களில் உயர்மின் கோபுரம் அமைத்து மின்பாதை செல்வதால் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர் வகைகள், தென்னை, பனைமரம் போன்ற மரங்கள், விலை உயர்ந்த தேக்கு, பூவரன் போன்ற மரங்கள், சவுக்கு, வாழை பயிர்களும் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மின்கோபுரம் அமைப்பதால் 30 சென்ட் நிலம் முழுவதும் எந்தவித பயன்பாட்டுக்கும் இல்லாமல் போவதும், 50-க்கும் மேற்பட்ட கிணறுகள் முழுவதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் கிணற்று பாசனம், ஆழ்துளை கிணறு ஆகியவற்றை நம்பியே விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது.
உயர்மின் கோபுரம் அமைப்பதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களுக்குரிய இழப்பீட்டை வழங்கிய பிறகே பணியை தொடங்க மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும். உயர்மின் கோபுரம் அமைப்பதால் நிலத்தின் மதிப்பு முற்றிலுமாக குறைந்துபோகிறது. எனவே இனிவரும் காலங்களில் சாலையோரம் கேபிள் வழியாக மின்சாரம் எடுத்துச்செல்ல வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.