உக்கடம் குளக்கரையில் சுற்றித்திரியும் செந்நாய்
உக்கடம் குளக்கரையில் சுற்றித்திரியும் செந்நாய்
கோவை
கோவை உக்கடம் பெரியகுளக்கரையில், உக்கடம் -செல்வபுரம் பைபாஸ் சாலை அருகே செந்நாய் ஒன்று சுற்றி திரிந்தது. இதனை வனவிலங்கு ஆர்வலரும், வனவிலங்குகள் புகைப்பட நிபுணருமான கஜமோகன்ராஜ் பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். செந்நாய் நடமாட்டத்தை படம் மற்றும் வீடியோ எடுத்தார்.
வனத்துறையினரும் அந்தநாயின் நடமாட்டத்தை பார்வையிட்டனர்.மாலை நேரத்தில் காக்கை உள்ளிட்ட பறவைகளை செந்நாய் விரட்டி உள்ளது. இவ்வாறு சுற்றித்திரியும் செந்நாய் குறித்து, வனவிலங்குகள் நல ஆர்வலர்கள் கூறியதாவது:-
செந்நாய் வனப்பகுதியில் இருந்து நொய்யல் ஆற்று வழித்தடம் வழியாக நகருக்குள் வந்துள்ளது.
மீண்டும் அதே வழியாக வனப்பகுதிக்குள் சென்றுவிட்டால் பிரச்சினை இல்லை. உணவு கிடைக்காவிட்டால் செந்நாய் குழந்தைகளையும் விரட்டி கடித்து குதறும் தன்மை கொண்டது. எனவே அதனை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
செந்நாய் நடமாட்டம் உள்ளதா? என்று வனத்துறை ஊழியர்களும் உக்கடம் குளக்கரை பகுதியில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.