டீ மாஸ்டரை கொன்ற தொழிலாளி கைது

டீ மாஸ்டரை கொன்ற தொழிலாளி கைது;

Update: 2021-09-07 17:03 GMT
டீ மாஸ்டரை கொன்ற தொழிலாளி கைது
கோவை

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 40). இவர் கோவையில் உள்ள வெங்கிடாபுரத்தில் டீ மாஸ்டராக பணி புரிந்தார். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி இவர் தடாகம் சாலையில் உள்ள ஒரு பேக்கரி அருகே தலையில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். பின்னர் இவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து பாக்கியராஜின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து பாக்கியராஜை சிகிச்சைக்காக நெல்லைக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து கோவை சாய்பாபாகாலனி போலீசார் அந்த பேக்கரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

இதில் ஒருநபர் குடிபோதையில் மயங்கி கிடந்த பாக்கியராஜை இழுத்து சென்று ஓரினசேர்க்கையில் ஈடுபட்டதும், அப்போது அவர் தாக்கியதில் தலையில் அடிபட்டு இருந்ததும் தெரியவந்தது.

 இதையடுத்து அந்த நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த நிலையில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மணி என்கிற ஜோசப் (62) என்பவர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்