நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் நாசரேத்தில் தனியார் கல்லூரி பேராசிரியை தூக்கு போட்டு தற்கொலை
நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில், நாசரேத்தில் தனியார் கல்லூரி பேராசிரியை திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாசரேத்:
நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில், நாசரேத்தில் தனியார் கல்லூரி பேராசிரியை திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி பேராசிரியை
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் வியாபாரிகள் தெருவை சேர்ந்தவர் செந்தில்முருகன். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு வேளாங்கண்ணி என்ற மகள் (வயது 28) மற்றும் 2 மகன்கள்.
இதில், வேளாங்கண்ணி தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கும், ஈரோட்டை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளை திருமணம்
பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, தங்களுடைய பெற்றோரிடமும் கூறியுள்ளனர். அதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இருவருக்கும் நாளை (வியாழக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதற்கிடையே, வேளாங்கண்ணி கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேளாங்கண்ணி வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் வேளாங்கண்ணி திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்கு பதிவு செய்து வேளாங்கண்ணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.