பாலம் கட்டும் பணி தாமதமாவதால் வீணாகும் தண்ணீர்
உடுமலை அருகே 4 வழிச்சாலைக்காக பி.ஏ.பி.கால்வாயில் பாலம் கட்டும் பணி தாமதமாவதால், கால்வாயில் விடப்பட்டுள்ள தண்ணீர் வீணாகி வருகிறது
உடுமலை
உடுமலை அருகே 4 வழிச்சாலைக்காக பி.ஏ.பி.கால்வாயில் பாலம் கட்டும் பணி தாமதமாவதால், கால்வாயில் விடப்பட்டுள்ள தண்ணீர் வீணாகி வருகிறது
4 வழிச்சாலை
தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம், பொள்ளாச்சியில் இருந்து உடுமலை நகரின் வடக்குப்புறம் உள்ள கிராமங்கள் மற்றும் மடத்துக்குளம் வழியாக திண்டுக்கல் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த 4 வழிச்சாலை அமையும் பகுதியில், உடுமலை அருகே உள்ள பெரியகோட்டை ஊராட்சி பகுதியில் சாலையின் குறுக்கே பி.ஏ.பி.உடுமலை கால்வாய் செல்கிறது.
பி.ஏ.பி.பாசன திட்டத்தில் 3ம் மண்டல பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 25ந் தேதி இந்த கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
பி.ஏ.பி.கால்வாய்
இந்த நிலையில், இந்த இடத்தில் பி.ஏ.பி.கால்வாயின் இருபுறமும் 4வழிச்சாலைக்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் பி.ஏ.பி.4ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதத்திற்குள் அந்த இடத்தில் பி.ஏ.பி.கால்வாயின் குறுக்கே 4 வழிச்சாலை பணிகளை முடிக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டனர். அதன்படி முதல் கட்டமாக 4 வழிச்சாலையின் குறுக்கே உள்ள பி.ஏ.பி. உடுமலை கால்வாயில் 30 மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் கால்வாயின் தளம் பகுதியில் பெட் கான்கிரீட் அமைத்தனர். அடுத்தகட்டமாக கால்வாயின் இருபுறமும் கான்கிரீட் கரைகள் அமைக்கப்படவும், அதன்பிறகு இந்த கால்வாய்க்கு மேல்பகுதியில் 4 வழிச்சாலைக்கான பாலம் கட்டப்படவும் வேண்டும்.
ஆனால் கால்வாயின் தளம் பகுதியில் பெட் கான்கிரீட் பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் கடந்த மாதம் ஆகஸ்டு திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கான தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் உடுமலை கால்வாயிலும் சென்று கொண்டுள்ளது. 4வது மண்டல பாசனத்திற்கு குறிப்பிட்ட நாட்கள் இடைவெளிவிட்டு 5 சுற்றுக்கள் தண்ணீர் திறந்துவிட திட்டமிடப்பட்டது. அதன்படி தற்போது 2வது சுற்று தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
வீணாகும் தண்ணீர்
இந்த நிலையில் 4வழிச்சாலையின் குறுக்கே நடைபெற்று வந்த பி.ஏ.பி.கால்வாய் மற்றும் பாலம் கட்டும்பணிகள் இன்னும்முடியாததால் அந்த இடத்தில் பி.ஏ.பி.கால்வாய்கரையின் வெளிப்பகுதியில் தண்ணீர் வீணாகிறது. .ஒவ்வொரு சுற்று தண்ணீர் திறந்துவிடப்படுவதற்கும் இடைவெளி விடும்நாட்களில், பாதியில்நிற்கும் பக்கவாட்டு சுவர் கால்வாய்கரைப்பகுதி மற்றும் பாலம் ஆகியவற்றை உடனடியாக முழுமையாக கட்டி முடிப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்க்கின்றனர்.
இதேபோன்று அந்த இடத்திற்கு அருகில் பி.ஏ.பி.கால்வாயில், சாலையின் குறுக்கே கட்டப்படும் பாலம் பணிகளையும் விரைவில் முடிக்கவேண்டும் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.
---
உடுமலை அருகே 4 வழிச்சாலை அமையும் இடத்தில், சாலையின் குறுக்கே பி.ஏ.பி. கால்வாய்பகுதியில் பணிகள் முடியாததால் தண்ணீர் வீணாவதை படத்தில் காணலாம்
--