நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை

திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.

Update: 2021-09-07 11:58 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.
கலெக்டர் ஆய்வு
 தாராபுரம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் வினீத் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் உள்ள பொது மருத்துவ பிரிவு, இயன்முறை மருத்துவம், தொற்றா நோய் பிரிவு, குழந்தைகள் பிரிவு, தாய் சேய் நலப்பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, ஆய்வகம், தடுப்பூசி அறை, தோல் நோய் பிரிவு, சித்தா மருத்துவபிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், மருந்துகள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் தொற்றா நோய் பிரிவில் தேவையான மருந்துகள் இருப்பு குறித்தும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
தாமதமின்றி சிகிச்சை
தேசிய குழந்தைகள் நலத்திட்ட மருத்துவக்குழு, நடமாடும் மருத்துவக்குழுவினர் தொடர்ந்து தங்கள் களப்பணியில் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு நோயின் தன்மைக்கேற்ப காலதாமதமின்றி உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
ஆய்வு குறித்து கலெக்டர் வினீத் கூறியதாவது
நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் அடிப்படை மருத்துவ சேவைகள், தாய்சேய் நல சேவைகள், கர்ப்பகால சிகிச்சை முறைகள், ஸ்கேன் பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை அளவு பரிசோதனை, இரும்பு சத்து குறைபாடு கண்டறிதல், தாய்-சேய் இருவருக்குமான தடுப்பூசிகள், 24 மணி நேர பொது மற்றும் கர்ப்பகால சிகிச்சைகள், உயர் சிகிச்சைக்கான பரிந்துரைகள் போன்ற அடிப்படை மருத்துவ சிகிச்சைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதுபோல் வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவில் அதிக கவனம் தேவைப்படுவோருக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுகிறது.
கருப்பை பரிசோதனை
டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களுக்கும், நாய்க்கடி, பாம்பு கடி உள்ளிட்ட விஷ கடிகளுக்கான சிகிச்சைகள், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்த வியாதிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கருப்பை பரிசோதனை மேற்கொண்டு உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. அனைத்து அடிப்படை மருத்துவ சேவைகளும் ஏழை, எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களிலேயே வழங்கப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.




மேலும் செய்திகள்