விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க கோரி முதல்-அமைச்சருக்கு வாழ்த்து அட்டை அனுப்பிய பா.ஜ.க.வினர்
சதுர்த்தி விழாவின் போது விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க கோரி பா.ஜ.க.வினர் முதல்-அமைச்சருக்கு வாழ்த்து அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி:
விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தனிநபர்கள் தங்களின் வீடுகளில் மட்டும் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வழக்கமாக சிலைகள் வைக்கும் இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தவும், சமூக இடைவெளியுடன் ஊர்வலமாக சென்று சிலைகளை கரைக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து அட்டை, தபால் அனுப்பும் போராட்டம் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. அதன்படி தேனி மாவட்டத்திலும் பா.ஜ.க.வினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழ்த்து அட்டை
தேனி தபால் நிலையத்தில் நடந்த வாழ்த்து அட்டை அனுப்பும் போராட்டத்துக்கு பா.ஜ.க. நகர தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி, மகளிரணி மாவட்ட தலைவி சுஜிதா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில், 500 தபால் அட்டைகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பதிவு தபால்களில் முதல்-அமைச்சருக்கு விநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்து செய்திகளை அனுப்பினர்.
இதுபோல் பெரியகுளம், கம்பம், உத்தமபாளையம், போடி ஆகிய இடங்களில் உள்ள தபால் நிலையங்களிலும் வாழ்த்து அட்டை மற்றும் பதிவு தபால்களை பா.ஜ.க.வினர் அனுப்பினர். மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தபால் பெட்டிகள் வழியாகவும் பா.ஜ.க.வினர் தனித்தனியாக வாழ்த்து அட்டை மற்றும் வாழ்த்து செய்தி அடங்கிய தபால்களை அனுப்பினர்.