நில உரிமை பட்டா வழங்க வேண்டும்
திருப்பூர் உடுமலை மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நில உரிமை பட்டா வழங்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.
திருப்பூர்
உடுமலை மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நில உரிமை பட்டா வழங்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.
மலைவாழ் மக்கள்
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது
உடுமலை தாலுகா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலையர் மற்றும் முதுவர் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 2006ம் ஆண்டு வன உரிமைச்சட்டப்படி நில உரிமை பட்டா சமூக உரிமை கோரி கடந்த 10 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு செட்டில்மெண்ட் பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடத்தி வன உரிமை குழுக்கள் அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களின் படி நில அளவை செய்யப்பட்டு வரைபடங்கள் தயார் செய்யப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், தேர்தல் விதிமுறைகள் காரணமாக கோட்ட அளவிலான கூட்டம் நடைபெறாமல் போனது. அதன்பிறகு நில உரிமை பட்டா வழங்கும் நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் போராட்டம் நடத்திய பின்னர் கோட்ட அளவிலான வனஉரிமை குழு பரிசீலனைக்கு எடுத்தது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய ஆட்சி அமைந்தபின் கோட்ட அளவிலான வன உரிமை குழு கூட்டம் 3 முறை நடைபெற்றது. அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்யப்பட்டு 300 பேருக்கு நில பட்டா வழங்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாவட்ட அளவிலான வன உரிமை குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நில உரிமை பட்டா
மாவட்ட அளவிலான வன உரிமை குழுவில் முதுவர் பழங்குடியினருக்கு மட்டும் பட்டா வழங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் புலையர் இன மக்களுக்கு நில உரிமை வழங்குவது காலதாமதம் ஆகி வருகிறது. மக்களுக்கு நில உரிமை வழங்கக்கோரி உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. எனவே 2006ம் ஆண்டு வன உரிமை சட்டத்தின்படி நில உரிமை பட்டாவும், சமூக உரிமையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
===============