பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றி

காரியாபட்டி பகுதியில் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Update: 2021-09-06 21:37 GMT
காரியாபட்டி, 
காரியாபட்டி பகுதியில் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
வெங்காயம் சாகுபடி 
காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களிலும் 450-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். 
 மழை பெய்தால்தான் இந்த பகுதியில் விவசாயம் செய்ய முடியும். ஆனால் ஏராளமான விவசாய நிலங்கள் மழையின்றி அனைத்தும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காடுகளாக மாறி விட்டது. இருந்தபோதிலும் பல்வேறு கிராமங்களில் மானாவாரியாகவும், போர்வெல் அமைத்தும் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் கடலை, நெல், பருத்தி, வெங்காயம், வாழை போன்ற பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  
விவசாயிகள் கவலை 
ஆனால் இந்த பகுதியில் இரவு நேரத்தில் காட்டு பன்றிகள் கூட்டம், கூட்டமாக அதிக அளவில் சுற்றித்திரிந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. 
இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தொடர்ந்து பயிர்களை பன்றிகள் சேதப்படுத்துவதால் சாகுபடி செய்த செலவை கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர். மேலும் அவர்கள் கூறுகையில், 
காட்டு பன்றிகளுக்கு பயந்து எந்த ஒரு விவசாயம் செய்ய முடியாமல் தரிசு நிலங்களாகவே விட்டு விட்டோம். இந்த பகுதியில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் தொடர்ந்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்