வனப்பகுதிக்குள் அத்துமீறி சென்ற 2 பேருக்கு அபராதம்
மசினகுடி அருகே வனப்பகுதிக்குள் அத்துமீறி சென்ற 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களது கார் பறிமுதல் செய்யப்பட்டது.;
கூடலூர்
மசினகுடி அருகே வனப்பகுதிக்குள் அத்துமீறி சென்ற 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களது கார் பறிமுதல் செய்யப்பட்டது.
வனப்பகுதியில் அத்துமீறல்
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா சார்ந்த தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம்போல செயல்பட தொடங்கி இருக்கின்றன. முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் மசினகுடி பகுதியில் உள்ள விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்கி செல்கின்றனர். இவர்கள் அத்துமீறி இரவில் வனப்பகுதிக்கு செல்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் முதுமலை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தலா ரூ.10 ஆயிரம் அபராதம்
அதன்படி நேற்று முன்தினம் மசினகுடி அருகே கல்லல்லா வனப்பகுதியில் சிங்கார வனச்சரகர் காந்தன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வனத்தில் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. இதை கண்டு உடனே பின்தொடர்ந்து சென்ற வனத்துறையினர் அந்த காரை வழிமறித்து நிறுத்தினர்.
பின்னர் அதில் இருந்த சுற்றுலா பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(வயது 25), சதீஷ்(27) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் சென்ற காரை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பாதுகாக்கப்பட்ட வனத்துக்குள் தடையை மீறி சென்றதாக 2 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
எச்சரிக்கை
இதுகுறித்து வனச்சரகர் காந்தன் கூறியதாவது:- பாதுகாக்கப்பட்ட வனத்துக்குள் காட்டுயானைகள், புலிகள், கரடிகள் உள்ளிட்ட ஆபத்தான வனவிலங்குகள் உள்ளது. இதை அலட்சியமாக நினைத்து சுற்றுலா பயணிகள் வனத்துக்குள் செல்லக்கூடாது.
தடையை மீறினால் வனவிலங்குகளால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் இதை உணர்ந்து வனத்துக்குள் அத்துமீறக்கூடாது. இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் எச்சரித்து உள்ளார்.