படகு சவாரிக்கான கட்டணம் குறைப்பு

ஊட்டியில் படகு சவாரிக்கான கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-09-06 21:28 GMT
ஊட்டி

ஊட்டியில் படகு சவாரிக்கான கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது.

படகு இல்லங்கள்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதனால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த ஊட்டி, பைக்காரா படகு இல்லங்களில் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. மேலும் ஊட்டி, பைக்காராவில் மோட்டார் படகுகள் பெட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை கூடியதால், படகு சவாரி கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதன்படி 3 விதமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

பழைய கட்டணம்

அதாவது வார நாட்கள், வார விடுமுறை நாட்கள்(சனி, ஞாயிற்றுக்கிழமை), சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் நாட்களில்(உடனடியாக படகு சவாரி செய்ய) என 3 வகையாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இது பழைய கட்டணத்தை விட 25 சதவீதம் அதிகமாக இருந்தது. 

தற்போது படகு இல்லங்கள் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் சவாரிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்ததால், சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் படகு சவாரி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று மீண்டும் பழைய கட்டணம் நடைமுறைக்கு வந்து உள்ளது. 

வைப்புத்தொகை

அதன்படி 2 இருக்கைகள் கொண்ட மிதி படகில் சவாரி செய்ய ரூ.500, 4 இருக்கைகளுக்கு ரூ.700, 4 இருக்கைகள் கொண்ட துடுப்பு படகில் சவாரி செய்ய ரூ.800, 6 இருக்கைகளுக்கு ரூ.900, 8 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகில் சவாரி செய்ய ரூ.800, 10 இருக்கைகளுக்கு ரூ.1,000, 15 இருக்கைகளுக்கு ரூ.1,400 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மிதி படகு மற்றும் துடுப்பு படகுகளில் அரை மணி நேரம் சவாரி செய்யலாம். மோட்டார் படகில் 20 நிமிடம் சவாரி மேற்கொள்ளலாம். 

மிதி படகு, துடுப்பு படகில் பயணம் செய்பவர்கள் மொத்த தொகையை செலுத்தி சவாரி முடித்த பிறகு பாதி தொகையை வைப்பு தொகையாக திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். உயர்த்தப்பட்ட படகு சவாரி கட்டணம் குறைக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்