கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா காலத்தில் ஊட்டி அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவக்கல்லூரி, கூடலூர் அரசு ஆஸ்பத்திரி, குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி எந்திரம் அமைக்கப்பட்டது. ஆனால் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அந்த வசதி இல்லாமல் இருந்தது.
இதையடுத்து கோத்தகிரியில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.30 லட்சம் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி எந்திரம் மற்றும் அறை அமைக்கப்பட்டது. இதனை நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து பேசும்போது,
கொரோனா 3-வது அலை வந்தாலும், அதை எதிர்கொள்ள மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளும் தயார் நிலையில் உள்ளன. கொரோனா சிகிச்சை மையமாக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியையும் மாற்ற முடியும் என்றார். தொடர்ந்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் பழனிசாமி கூறுகையில், கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி 66 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஆக்சிஜன் உற்பத்தி எந்திரம் மூலம் நிமிடத்திற்கு 130 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்றார்.
இதில் குன்னூர் உதவி கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன், முன்னாள் தலைமை மருத்துவர் பார்த்திபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.