மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை செயல்படுத்த துணையாக இருப்பேன்
மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை செயல் படுத்த உறுதுணையாக இருப்பேன் என்று கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் உறுதியளித்தார்.
புதுச்சேரி, செப்.7-
மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை செயல் படுத்த உறுதுணையாக இருப்பேன் என்று கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் உறுதியளித்தார்.
தேநீர் விருந்து
புதுச்சேரி மாநில 15-வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்ததையொட்டி எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலை கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணன் குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிருஷ்ணியா மற்றும் அரசு செயலாளர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உறுதுணையாக இருப்பேன்
நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது முதல் பட்ஜெட் கூட்டத்தொடரை நிறைவு செய்திருக்கிறது. இதில் மக்களுக்கு பயன்தரும் பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தின் கவர்னர் என்ற முறையிலும், புதுச்சேரி மக்கள் மீது அக்கறை கொண்ட ஒருவர் என்ற வகையிலும் மக்களுக்கு பயன்தரும் விதத்தில் அமைந்துள்ள அனைத்து திட்டங் களையும் செயல்படுத்த உறுதுணையாக இருப்பேன்’ என்றார்.
நல்ல திட்டங்கள்
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசுகையில், ‘புதுச்சேரியின் மீது அக்கறை கொண்ட கவர்னர் இருக்கும் வரையில் மாநிலம் நல்ல முன்னேற்றம் அடையும். புதுச்சேரியை பசுமை மாநிலமாக மாற்ற வேண்டும் என்று நினைத்து 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று வலியுறுத்தினார். நமது மாநிலத்தின் மீது அவருக்கு இருக்கும் அக்கறையை இது வெளிப்படுத்துகிறது. அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல நல்ல திட்டங்களை அறிவித்திருக்கிறது. மக்களின் நன்மைக்காக அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும்’ என்றார்.