நின்ற லாரி மீது ஸ்கூட்டர் மோதல்; பேரக்குழந்தைகளுடன் முதியவர் பலி
மண்டியா அருகே நின்ற லாரி மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் பேரக்குழந்தைகளுடன் முதியவர் பலியாகினர். மருமகள் படுகாயம் அடைந்தார்.
மண்டியா: மண்டியா அருகே நின்ற லாரி மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் பேரக்குழந்தைகளுடன் முதியவர் பலியாகினர். மருமகள் படுகாயம் அடைந்தார்.
நின்ற லாரி மீது மோதியது
மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா ஹொனகெரே கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(வயது 62). ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த இவர், தாலுகா பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினராகவும் இருந்தார்.
குட்டேனஹள்ளியில் உள்ள தோட்டத்து வீட்டில் ஆனந்தகுமார் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஆனந்தகுமார் ஸ்கூட்டரில் சொந்த கிராமமான ஹொனகெரேவுக்கு செல்ல புறப்பட்டார். அதன்படி ஸ்கூட்டரில் தன்னுடன் மருமகள் மோனிகா, பேத்தி ஆராத்யா(10), பேரன் கவுரவ் (5) ஆகியோரையும் அழைத்து கொண்டு சென்றார்.
குட்டேனஹள்ளி கிராஸ் அருகே உள்ள துமகூரு-மைசூரு சாலையில் ஸ்கூட்டர் சென்று கொண்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் சாலையோரம் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை கவனிக்காமல் ஓட்டிச் சென்ற ஆனந்த்குமார், ஸ்கூட்டருடன் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதினார்.
3 பேர் பலி
இதில் ஸ்கூட்டரில் தூக்கி வீசப்பட்ட ஆனந்த்குமார் மற்றும் அவரது பேத்தி ஆராத்யா, பேரன் கவுரவ் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மருமகள் மோனிகா படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், படுகாயம் அடைந்த மோனிகாவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிதத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோகம்
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நாகமங்களா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான ஆனந்த்குமார், அவரது பேரக் குழந்தைகள் 2 பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகமங்களா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் தாத்தா-2 பேரன்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.