வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு வழக்கு: 13 பேர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்

வங்காளதேச இளம்பெண் கூட்டாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் 13 பேர் மீது சிறப்பு கோர்ட்டில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

Update: 2021-09-06 21:15 GMT
பெங்களூரு: வங்காளதேச இளம்பெண் கூட்டாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் 13 பேர் மீது சிறப்பு கோர்ட்டில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இளம்பெண் கூட்டாக கற்பழிப்பு

பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த இளம்பெண்ணை ஒரு கும்பல் கூட்டாக கற்பழித்ததுடன், இளம்பெண்ணின் மர்ம உறுப்பில் பீர்பாட்டிலால் தாக்கி அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது. இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இந்த வழக்கு குறித்து ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது கற்பழிப்புக்கு ஆளான இளம்பெண் பாலியல் தொழில் செய்து வந்ததும், வங்காளதேசத்தில் இருந்து பெங்களூருவுக்கு அவரை வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.

13 பேர் மீது குற்றப்பத்திரிகை

மேலும் பணப்பிரச்சினையில் அந்த பெண் மீது கொடூர தாக்குதல் நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் தம்பதி உள்பட 10-க்கும் மேற்பட்டோரை ராமமூர்த்திநகர் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் பல பெண்களை வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து விபசாரத்தில் தள்ளியதும் தெரியவந்தது. இதன்பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டு இருந்தது. இந்த வழக்கு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இளம்பெண் கற்பழிப்பு வழக்கு குறித்து பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் 13 பேர் மீது நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். அதாவது இந்த வழக்கில் தொடர்புடைய ரபீக், சோப்யூஷ் சேக், ரகிப்துல் இஸ்லாம் ருடோய், ரகிபுல் இஸ்லாம், பாபு மொல்லா, அலாமி உசேன், தலிம் அகமது ஜிபான், உசேன் அசிம், முகமது ஜமால், இனாமுல் ஹக், ருகுல் அமீன், ரிடாய் இஸ்லாம், முகமது மில்லன் பிஸ்வாஸ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்