காட்டுயானை தாக்கி வனக்காவலர் சாவு

எச்.டி.கோட்டை அருகே காட்டுயானை தாக்கி வனக்காவலர் பலியானார்.

Update: 2021-09-06 21:14 GMT
மைசூரு: எச்.டி.கோட்டை அருகே காட்டுயானை தாக்கி வனக்காவலர் பலியானார்.

வனக்காவலர்

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா நஞ்சய்யன காலனியை சேர்ந்தவர் அனுமந்தய்யா(வயது 56). வன காவலரான இவர், நேற்றுமுன்தினம் இரவு சக வனஊழியர்கள் 2 பேருடன் எச்.டி.கோட்டை வனப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து காட்டுயானை ஒன்று இரைதேடி வந்துள்ளது. 

இந்த சந்தர்ப்பத்தில் காட்டுயானை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அனுமந்தய்யா உள்பட 3 பேரை தாக்க வந்துள்ளது. இதையறிந்த 3 பேரும் காட்டுயானையிடம் இருந்து தப்பிக்க ஓடினர். 

காட்டுயானை தாக்கி பலி

சிறிது தூரத்தில் அனுமந்தய்யா ஓடமுடியாமல் கீழே விழுந்தார். இதனால் பின்னால் துரத்தி வந்த காட்டுயானை, அனுமந்தய்யாவை தாக்கியது. பின்னர் காட்டுயானை அனுமந்தய்யாவை காலால் மிதித்து தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அனுமந்தய்யா சம்பவ இடத்திலேயே பலியானார்.

 இதையடுத்து காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதுபற்றி எச்.டி.கோட்டை வனத்துறை அதிகாரிகளுக்கும், புறநகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சோகம்

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் காட்டுயானை தாக்கி பலியான வனகாவலர் அனுமந்தய்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எச்.டி.கோட்டை புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பணியின் போது காட்டுயானை தாக்கி வனகாவலர் உயிரிழந்த சம்பவம் மைசூருவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்